துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவது எப்படி என்பதே மனிதரின் மாபெரும் தேடல். மனதிலிருந்து விடுதலை பெறாது துன்பங்களிலிருந்து விடுதலை பெறமுடியாதென்பது ஆன்மீகத்தில் ஈடுபடுவோரின் கூற்று. ஏனெனில் மனித மனம் என்பது எப்போதும் துன்பங்களை நாடுகிறது, ஈர்க்கிறது.
”தன்னைவிட மகிழ்ச்சியாக இருப்பவர்களை பிறர் நாடுவதில்லை. இன்னொருவர் மகிழ்ச்சியாக இருப்பதை அவர்கள் விரும்புவதில்லை. தமது துன்பம் அவர்களுக்குத் தெரிந்துவிடக் கூடாதென நினைப்பார்கள். அதே சமயம் தம்மை விட துன்பப்படுபவர்களைப் பார்த்து உள்ளே மகிழ்ச்சியடைவார்கள்.” - சமீபத்தில் சத்சங்கத்தில் கேட்ட சாட்டையடி போன்றதொரு கூற்று. உள்ளதை உள்ளபடி கூறுவதானால், நம் மனதிற்குள் உள்ளதை அப்பட்டமாகக் காட்டும் வரிகள்.
அதை விரிவாகப் பார்த்தால், இப்படியும் கூறலாம். நம் துன்பம் அடுத்தவருக்குத் தெரியக் கூடாதென நினைப்பது ஒருவகையில் நம்முள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்குவது உண்மையானாலும், நம் துன்பத்தைப் பார்த்து பிறர் மகிழ்ச்சியடைந்துவிடக் கூடாதென்ற பெருந்தன்மையும் இருக்கலாம். ஏனெனில் நாம் பெருந்தன்மையாவர்கள், நல்லவர்கள் என்பதில் பெருமை கொள்பவர்களாயிற்றே. அத்தோடு துன்பத்திலிருப்பவரைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறோம் என்பதும் சரிதான். அதனால்தான் துன்பத்தைப் பகிர்ந்துகொள்கிறோம் என்ற பெயரில் துன்பத்திலிருப்பவரை நாடிச் செல்கிறோம். ஆனால் நல்லவர்கள் யாரும் அடுத்தவர் துன்பத்தில் மகிழ்ச்சி கொள்வதில்லையே. நம்மை நல்லவர்கள் என எண்ணிக் கொள்வதனால் நாம் மகிழ்ந்ததையெண்ணிக் குற்றவுணர்வு கொள்கிறோம். அதனாலேயே துன்பத்திலிருப்பவருக்கு தோள் கொடுத்து தூக்கிவிடுகிறோம். மீண்டும் நாம் நல்லவர்கள்தான் என நமக்குள் பெருமை கொள்கிறோம்.
மகிழ்ச்சி வேண்டும் என அனைவருமே கூறிக்கொண்டாலும், மகிழ்ச்சியாகவே இருந்துவிடுவதை உண்மையில் யாரும் விரும்புவதுமில்லை. “Happily ever after” என்பது கதைகளுக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். ஆனால் மனித மனம் மகிழ்ச்சியில் சலிப்புற்று விடுகிறது. அதற்கு ஏதாவதொன்று நிகழ்ந்துகொண்டே இருக்கவேண்டும். துன்பத்தை இழுத்துவைத்துக் கொள்கிறது. பின் அதிலிருந்து விடுதலை பெற்று இன்பத்தை அடைவதெப்படி என்று கனவு காண்கிறது.
அதுபோக, அடுத்தவர் மகிழ்ச்சியாக, இன்பமாக இருப்பதையும் விரும்புவதில்லை. தானும் துன்பத்தில் உழல வேண்டும். அடுத்தவரும் துன்பத்திலேயே இருக்க வேண்டும், உலகமே துன்ப மயமாக இருக்கவேண்டும், அப்போதுதானே அனைவர்மீதும் அனுதாபப்பட்டு தன் பெருந்தன்மையைக் காட்டமுடியும். இது தனி மனிதர்கள் என்றல்ல நாடுகளுக்கும் பொருந்தும். ஏதாவதொரு நாடு நிறைவாக இருப்பதாகத் தெரிந்தால், ஒரு பிரச்னையை உருவாக்கி விடுவது. பின் தமது பெருந்தன்மையைக் காட்ட உதவி செய்வது. இப்படி நாம் நல்லவர்கள், பெருந்தன்மையானவர்கள் என்பதை நமக்கு நாமே நிரூபித்துக் கொள்வதிலேயே நம் வாழ்நாளைக் கழித்துவிடுகிறோம். அதனால்தான் மனம் அழியாது ஆன்ம விடுதலை சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment