பல தடுமாற்றங்கள் பயங்கள், அனைத்தையும் மீறி எதோ ஒன்று இதை எழுதிய ஆக்கவேண்டுமென்று உந்துகிறது. கொஞ்சம் கொஞ்சம் எஞ்சியிருந்த துணிவைத் திரட்டி இப் பதிவை எழுதத் தொடங்குகிறேன் - அசட்டுத் துணிச்சல் தானோ….. இது எங்கே எடுத்துச் செல்லப் போகிறதென்று நானறியேன்.
“காற்றின் குரல்” - நானாக அவனைத் தேடிச் செல்ல முடியாதபோது, காற்றாகி அவன் காதுகளை எட்டிவிட வேண்டுமென வைத்த பெயரது. ஆனால் அவனைத் தேடியே என் வரிகள் சென்றபோதிலும் அவன் என்னைக் கண்டுகொண்டான் என்றதும் நத்தையாகி என்னுள் ஒடுங்கிக் கொண்டேன். ஏன் இந்தத் தடுமாற்றம்? எங்கோ கண்ணுக்கெட்டிடாத தொலைவில் இருந்தபோதிலும் இன்னும் இன்னும் நெடுந்தொலைவு விலகி ஓடிச் சென்றுவிட விழைகிறது மனம். ஆனால் இன்னொருபுறம் அவனைச் சுற்றியே வட்டமிடும் சித்தம். இரண்டுக்குமிடையில் தடுமாறி நிற்கிறது நான் என்ற இன்னும் எதோ ஒன்று.
குதித்தோடும் நதியாகவும் சிறகடிக்கும் படடாம்பூச்சியாகவும் என்னை உணர்ந்துகொள்ளும் நானே சமயங்களில் கூட்டுப் புழுவாகி எனக்குள் ஒடுங்கி கொள்கிறேன். அவ்வப்போது ஏதோ ஓர் அலை - எனக்குள் சிலிர்த்துப் போகிறேன். அவனுக்குள் நான் இருந்துகொண்டிருப்பதாக, எனக்குள் அவன் இருந்து நிகழ்த்திக் கொண்டிருப்பதாக ஏதேதோ எண்ணங்கள் - இதை வேறெவ்வாறு சொல்வதென்று தெரியவில்லை.
ஆம் நான் கையில் அள்ளிய கடலின் துளி. அதை தொட்டு மகிழ, அதனுள் வானத்தைப் பார்த்து வானமே என்கையில் என மகிழ்ந்துகொள்ள முடிகிறது என்னால். இதை எந்த சூத்திரத்தாலும் விளக்க முடியுமென்று தோன்றவில்லை. சூத்திரங்களெல்லாம் ஆண்களுக்காக ஆண்களால் எழுதப்படடவை. ஒரு பெண்ணின் உள்ளத்தில் பொங்கிவழியும் அன்பை எந்தசூத்திரமும் வரையறுத்துக் கூறமுடியுமென்று தோன்றவில்லை.
திருமந்திரம், பதஞ்சலி யோகசூத்திரம்… - இந்த சூத்திரங்களால் எனக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை. முதலில் அவை புரியப் போவதுமில்லை. பொருட்டாக இருப்பது ஒன்றே ஒன்றுதான் - அவற்றின் நாயகன் மட்டுமே. இது எப்போதும் நடந்தே வந்திருக்கிறது. சத்சங்கங்கள் சென்றபோதும் அங்கே எதுவும் புரிந்ததில்லை. இன்றோ எங்கும் செல்லாதபோதும் கண்ணன் குரல் எப்போதும் காதில் ஒலித்து என்னை வழிநடத்திச் செல்கிறது.
அவன் என்னுளிருந்து அனைத்தையும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறான். எனக்குள் இருந்து அவன் பொழியும் அன்பே என்னைச் சூழ நிறைந்திருக்கிறது. அவனது வரையறையற்ற அன்பே என் இதயத்தை நிறைத்து பொங்கி வழிகின்றது. அவன் அன்பே என் முன்னால் வழிநிறைத்து விரிந்து கிடக்கிறது. அவனது அன்பு இட்ட பாதையில் பாதங்கள் நோகாது, பாதையை நோக்காது பயணிக்க ஆரம்பிக்கிறேன். அவன் அன்பே வழிநடத்தட்டும் இவளை...
No comments:
Post a Comment