எப்போதுமே மகாபாரதத்தில் ஒரு தனி விருப்பு இருந்துள்ளது எனக்கு. எப்போது எந்தவடிவில் கிடைத்தாலும் வாசிக்காது விடுவதில்லை. அது குறுங் கதையானாலும் பெருங் கதையானாலும் சரி, இன்னும் தொலைக்காட்சி தொடர்களையும் விட்டுவைப்பதில்லை. “வெண்முரசு” - மகாபாரதம் நாவல் வடிவில் என்றதும், அதையும் விட்டுவைப்பானேன் என்று வாசிக்கத் தொடங்கியது கூட வெறும் ஒரு மகாபாரதம் வாசிக்கும் நினைப்பில்தான்…
ஆனால் வாசிக்க வாசிக்க அது என்னை வேறோர் உலகிற்கு இட்டுச் சென்றது. ஒரு உள்நோக்கிய பயணமாக, யாத்திரையாக அமைந்தது. அடைபட்டிருந்த பல கதவுகள் திறந்துகொண்டன. உள்ளே ஒளிந்து மறந்து, மறைந்து விட்டதாக எண்ணியிருந்த கண்ணன் “நீல”த்துடன் தவழ்ந்து வளர்ந்து விஸ்வரூபம் எடுக்கத்தொடங்கினான். எங்கும் கண்ணன் எதிலும் கண்ணன் என்றே ஆகிவிட்டது.
கண்ணன் கடவுளாகவோ கதாபாத்திரமாகவோ அன்றி ஒரு நிகழ்வாக ஆகிவிட்டான். இறந்தகாலம் எதிர்காலம் என்றே இல்லாமல் எல்லாமே ஒன்றாகிவிட்டதான ஒரு பிரமை. “இமைக்கணம்” கால வரையறையற்ற காடு. அதுபோல் என் வாழ்வும் அமைந்துவிட்டதான ஒரு மயக்கம்….
அங்கேதான் எனக்குரிய கீதையும்… இங்கே திரௌபதி கேட்கும் கேள்விகளும், கண்ணனின் பதில்களும் எனக்காகவே அல்லது என்போன்ற பெண்களுக்காக சொல்லப்பட்டதாகவே அமைகிறது.
நைமிஷாரண்யத்தில் திரௌபதி இளைய யாதவரிடம் கேட்டாள் “வற்றி ஒடுங்கி மறைவதன் விடுதலை நதிகளுக்குரியதல்ல. பெருகிப் பரவி கடலென்றாவதே அவற்றின் முழுமை. ஒருமையில், இன்மையில் குவிந்து அமையும் முழுமை பெண்களுக்குரியதல்ல. பன்மையும் பெருக்கமுமே அவர்களுக்குரியது. நான் பெண்ணென்றன்றி எப்போதும் உணர்ந்ததில்லை. முக்திபெற்று விண்மீன் என வானில் நின்றாலும் பெண்ணென்றே ஆவேன். எனக்குரிய மீட்பென உன் நெறி கூறுவது என்ன?”
அங்கு திரௌபதி பேசுவது எந்தப் பெண்ணுக்கும் எழும் கேள்விகளே…
-இது திரௌபதிக்கு மட்டுமல்ல எனக்கும் கூடத்தான். அன்பனாக அன்றி அவனை நான் அறிந்ததில்லை.
“நான் என்னுள் எப்போதும் உன்னை கொண்டிருக்கிறேன்…. கிருஷ்ணா, நான் உன்னை பிறன் என உணர்ந்ததேயில்லை……..என்னுடன் இருந்து நீ வளர்ந்தாய். நீ என் உடன்பிறந்தான் அல்ல. என் காதலனும் அல்ல. என் தோழன். உடன்பிறந்தானைவிட காதலனைவிட அணுக்கமானவன்.” இது திரௌபதியின் கூற்றாக அல்ல என்னுள்ளிருந்த குரலாகவே ஒலித்தது.
“என்னுள் இருந்து உன்னை அள்ளி உன்மேல் பூசி உன்னை வனைந்து கொண்டிருந்தேன். ஒவ்வொருமுறையும் நீ என்னை மீறிமீறிச் சென்றாய். உன்மேல் சினம் கொண்டதுண்டு. உன்னை வெல்ல எண்ணியதுண்டு. உன்னிடமிருந்து அகலவும் முயன்றதுண்டு. உன் அலகிலா ஆற்றலைக் கண்டு அஞ்சியிருக்கிறேன். உன்னிலெழும் பெருவஞ்சத்தைக் கண்டு அருவருத்திருக்கிறேன். உன்னில் பேருருக்கொள்ளும் அழிவைக் கண்டு சொல்லவிந்திருக்கிறேன்.”
இவ்வரிகள்தான் என்னுள்ளிருந்து என்னை எனக்கு எடுத்துக் காட்டியது. ஒரு சமயம் அவனை ஒரு வரையறையில் அடக்க முயன்று முடியாமல் வெறுப்பை சுமத்தி விலகிவிட்டிருந்தேன் - அல்லது விலகியதாக நினைத்திருந்தேன் - நினைத்துத் தானிருந்தேன். ஏனெனில் அவனைவிட்டு விலகுவது என்பது என் இறப்பில் கூட நடக்கமுடியாத ஒன்று என இப்போது புரிகிறது.
அவன் உண்மையில் விலகிவிட்டிருந்தால், இன்று இவள் இருந்திருக்கவே முடியாது. இருளின் ஆழத்தில் புதையுண்டிருந்தவளை துளிர்விட்டு பூத்துக் குலுங்கவைத்தது அவன்தான் என்பது அந்த ஆழ்நரகிலிருந்து மீண்டபின்தான் தோன்றுகிறது. அவனை விட்டு விலகியதாக நான் நினைத்திருந்த இத்தனை வருடங்களில் அவன் மிக மிக நெருக்கமாகவே வந்துவிட்டிருந்தான். கடந்த சில காலமாகவே என் ஒவ்வொரு அசைவையும் அவன் பார்த்துக்கொண்டிருப்பதாக, என்னுடனேயே இருந்து நிகழ்த்திக் கொண்டிருப்பதாக உணர்கிறேன்.
கண்ணன் அரசனாகியிருக்கலாம், பேரரசனாகியிருக்கலாம், யுத்தங்கள், உபதேசங்கள் என எத்தனையோ நிகழ்த்தியிருக்கலாம். தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தையே கூட உருவாக்கியிருக்கலாம். ஆனால் பிருந்தாவன கோபிகைகளுக்கு அவன் வேய்ங்குழல் இனியவன் மட்டுமே…
அவன் கூறும் சூத்திரங்கள் கணிதங்கள் எல்லாம் எனக்கு புரிந்ததில்லை. அதையெண்ணி இனி நான் கவலைகொள்ளப் போவதுமில்லை. இன்னோர் உலகையே படைத்து அரசனென அமர்ந்திருந்தாலும், அனைவரும் வணங்கும் நிலையிலிருந்தாலும் எதுவும் பொருட்டல்ல எனக்கு. அவன் குரல் ஒன்றே பொருட்டெனக்கு. அவனிடமிருந்து எதையும் எடுத்து வந்ததில்லை. என்னைத் தொலைத்தே வந்திருக்கிறேன்.
கிட்டத்தட்ட ஒரு வருடமாக வெண்முரசு வாசித்தபோதுதான் இது புரிந்தது எனக்கு. “இமைக்கணம்” கொடுத்த புரிதல் அது. திரௌபதி கண்ணனை சந்த்தித்த அந்த தருணத்திலேயே ஸ்தம்பித்து நின்றுவிட்டது மனம். இது நிகழ்ந்தே ஏறத்தாழ ஒரு வருடமாகிறது. அதற்குமேல் வாசிக்க முயற்சித்தும் முடியவில்லை. இதுவே நிறைவென்று தோன்றியது.
முதல்முறையாக ஒரு நூலை வாசித்து முடிக்காமலேயே நிறைவெய்தியிருக்கிறேன்.இது ஏன் என்று தெரியாத குழப்பத்துடன் கூடிய ஒரு பரவசத்தில் மிதந்துகொண்டிருக்கிறேன். இங்கே திரௌபதியின் கூற்று என்னுள்ளிருந்தென ஒலித்துக் கொண்டிருக்கிறது…… ”இங்கிருந்து நெடுந்தொலைவு சென்று சுழன்று வந்து மீண்டும் உன்னை அடைய முடியுமெனத் தோன்றுகிறது.”
மீராவைப் போல் ராதையைப் போல் பைத்தியமாகி விட்டிருக்கிறேன். எனக்குள்ளிருந்த அளவைகள் வரையறைகளையெல்லாம் தகர்த்தெறிந்தவன் அவனே.. எனக்கென்று ஒரு திமிர், மனிதர்கள் யாரும் வணங்க தகுதியானவர்களல்ல என்ற ஒரு வரையறை, அதற்கு மேலும் எந்த ஆணையும் ஏறெடுத்துப் பார்க்காத அகம்பாவம்… சொல்லிக்கொண்டே போகலாம். எல்லாமே அவன்முன் தகர்ந்துவிட வெறும் ஒரு பெண்ணாக அவன் பாதங்களில் சரணடைந்தேன்.
ஆனாலும் இடையில் எனோ குழப்பங்கள். அவனை முழுதாக விலகிவிடவேண்டும் மறந்துவிட வேண்டும் என்ற வேகம், கோபம். அதனால்தானோ என்னவோ நானே என்னையிழந்து வேதனையில் மூழ்கிவிட்டேன் சில காலம். ஆனால் காலத்தால் தூரத்தால் நெடுந்தொலைவு வந்துவிட்டபின் எங்கு விடுத்தேனோ அங்கேயே என்னைக் கண்டுகொண்டேன். இன்னும் அவன் கைகளில் பாதுகாப்பாக நான் தொலைத்துவிட்ட நான்….
இன்றோ வாழ்க்கை கடந்த வருடங்களின் கோபம் அதன்பின்னான கடுந்துயரின் இருளிலிருந்து விடுபட்டு கண்ணனுடன் ஆடிப் பாடும் பரவசத்துடன் செல்கிறது. “கண்ணா” என அவன் பெயரைக் கூறும்போதே உருகிவிடுகிறேன். தினமும் அந்தப் பெயருடன் உருகி ஆறாக ஓடி அவன் பாதங்களைத் தழுவி மீள்கிறேன்…….
No comments:
Post a Comment