கண்ணன் - ராதை என்பது காதலின் குறியீடாகவும் பக்தியின் குறியீடாகவும் பார்க்கப்படும் ஒன்று. ராதை என்பவள் கோபிகைகளில் ஒருத்தி என்றும் கண்ணனின் தனிப்படட அன்பிற்குப் பாத்திரமானவள் என்பதும் கூட பெரும்பாலும் அறியப்பட்ட விடயமே. இதில் கண்ணனும் ராதையும் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதைப் பற்றி பலவித கருத்துக்களும் வாதப் பிரதிவாதங்களும் இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றன.
ராதையும் கண்ணனும் வேறல்ல இருவரும் ஒருவரே. ஒருவர் தன்னைத்தானே எவ்வாறு மணக்க முடியும்? என்பது பரவலாக உலா வரும் கருத்து. ராதை என்பவள் லடசுமியின் வடிவம், அதனால்தான் கண்ணன் லடசுமியின் இன்னொரு வடிவமான ருக்மணியை மணந்து கொண்டான் என்றும் சொல்லப்படுகிறது (அதற்கு, ஒரு வடிவத்தை விடுத்து இன்னொரு வடிவத்தை மணப்பானேன் என்ற கேள்வியையும் எழுப்பமுடியும்).
எனக்கு கொஞ்சம் ஏற்றுக்கொள்ளும்படி தோன்றிய ஒரு கருத்து, கண்ணனும் ராதையும் அன்பைப் பரிமாறிக் கொண்டார்கள். ஆனால் அதற்கு அவர்கள் எந்தவித label உம் கொடுக்க விரும்பவில்லை. அதாவது அந்த அன்பை ஒரு குறிப்பிட்ட உறவுக்குள் அடைத்து அதற்கு ஒரு வரையறை கொடுக்க விரும்பவில்லை. அதனாலேயே அவர்கள் மணம் செய்து கொள்ளவில்லை. இது கொஞ்சம் எனக்கு பிடித்திருந்த காரணம், கண்ணன் என்பது ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அவதாரமாக கொள்ளப்படுகிறது. ஒரு புரட்சி என்பதும் புதிய யுகத்திற்கான ஆரம்பம் என்பதும் அங்கிருந்து தொடங்குகிறது. பெண் விடுதலைக்கான அத்திவாரம் பாரதியார் இட்டது என்பார்கள். அந்த அத்திவாரத்துக்கு மண்ணெடுத்தவன் கண்ணன். பெண்ணை அவளது பலம் மற்றும் பலவீனத்தோடு நேசித்தவன்.
பெண்ணை பூமாதேவியாகப் பார்க்கிறோம் தெய்வமாகப் பார்க்கிறோம் தாயாக பூஜிக்கிறோம் என்னும் ஆண்களுக்கு பெண்ணை ஒரு பெண்ணாக, ஒரு சக உயிராகப் பார்க்க முடிவதேயில்லை. அவளை ஒரு உறவென்ற சிறைக்குள் அடக்காமல் அவளுடன் பழக சாதாரணமாக ஆண்களால் முடிவதில்லை. அந்த வரையறைகளைக் கடந்து, வீட்டுச் சிறைக்குள் பெண்கள் இருந்த காலத்திலேயே அவர்களுடன் வரையறையின்றி ஆடிப்பாட முடிந்தது கண்ணனால். உற்ற தோழனாக தன்னைச் சூழ இருந்த பெண்களைப் புரிந்துகொண்டு பழக அவனால் மட்டுமே முடிந்தது. இதனால்தான் அந்த இறுதிக் காரணம் சற்று ஏற்றுக் கொள்ளும்படி இருக்கிறது எனக்கு.
ஆனால் இதைவிடவும், ராதை என்ற ஒருத்தி கிடையவே கிடையாது. அது பிற்காலத்தில் கண்ணனின் லீலைகளைப் பாடிய கவிகள் செய்த சில்மிஷம் என்று கூறுவாரும் உண்டு. அது கூட ஒரு வகையில் உண்மையாக இருக்கலாம். இது எனது புரிதல். ராதை என்பது கோபிகைகளில் பொதுவாக வழங்கப்பட்ட ஒரு பெயர். அதற்கு அன்பின் தெய்வம் என்ற பொருளும் கூறப்படுகிறது. அது பின்னாளில் சேர்க்கப்பட்ட அர்த்தமாகக் கூட இருக்கலாம். அதை ஒரு ஓரமாக வைத்துவிடலாம். கண்ணன் அந்த கோபிகைகள்மீது வைத்த வரையறையற்ற அன்பே ராதை என எடுத்துக் கொள்ளலாம். அப்படிப் பார்க்கப்போனால் கண்ணனின் அன்பிற்குப் பாத்திரமான, அவன்மீது வரையறையின்றி அன்பைப் பொழிந்த அனைத்துப் பெண்களுமே ராதைத்தான்.
இன்றும்கூட பெண்கள் தம் அன்பிற்குப் பாத்திரமான எந்த ஆணை விளிக்கும்போதும் - அது குழந்தையோ காதலனோ - கண்ணா என்றே அழைக்கிறார்கள். அந்தக் கண்ணன்போல இவர்களும் தங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் போலும். அல்லது அப்படி அன்பைப் பரிமாறிக்கொள்ளும்போது அனைவருமே கண்ணன், ராதையாக மாறிவிடுகிறார்கள் போலும். இங்கு கண்ணனோ ராதையோ அல்ல அந்த வரையறையற்ற அன்பே பேசுபொருளாக இருக்கிறது. அதைப் பேச வார்த்தைகளின்றி கண்ணன், ராதை என ஏதேதோ பிதற்றிக்கொண்டிருக்கிறோம்.
No comments:
Post a Comment