மனதை மயக்கும் மாலை நேரம். பிருந்தாவனத்தின் சோலையில் மெல்லிய தென்றலில் தவழ்ந்து வந்தது குழலிசை. அது அந்த மாயக் கண்ணனின் குழலிசையேதான். கொன்றை மரத்தின் வேரில் ஒரு கால் நீட்டி மறுகால் மடித்தமர்ந்திருந்தான் மாயன். இமைகள் சரிய மோனத்தில் மூழ்கியிருந்தான் அவன்.
அப்போது கால்களே நிலத்தில் பாவாமல் காற்றில் மிதப்பது போல் ராதை மெல்லடி வைத்து வந்து மரத்தின் பின்னால் மறைந்துகொண்டாள். சட்டெனக் குழலிசைப்பதை நிறுத்தியவன், "வா ராதா" என்றான். சிறு புன்னகையுடன் கண்ணன்அருகே வந்து அமர்ந்துகொண்டாள் ராதா. அவளைக் குறும்புடன் நோக்கி, “எனக்காக என்ன கொண்டுவந்தாய் ராதா?” என்றான். “நீயே பாரேன்" என கையிலிருந்த பொட்டலத்தை அவனிடம் நீட்டினாள். அதை வாங்கி அவிழ்த்தவன், “ஆகா இப்போதுதான் அவல் சாப்பிடடால் நன்றாக இருக்குமே என எண்ணினேன். என் மனமறிந்து கொண்டுவந்ததற்கு நன்றி” என்றான். சொன்னதையுணர்ந்து அவன் நிமிர்ந்து அவளைப் பார்ப்பதற்குள், உடைந்துபோய் கண்கலங்க அவனைப் பார்த்தாள். "என்னை வேற்றவள் ஆக்கிவிட் டாயல்லவா?" என்றது அந்தப் பார்வை. வேகமாக எழுந்தவள் காற்றில் கரைந்து மறைந்துவிடடாள்.
அவள் காலடியைத் தொடர்ந்து சென்றான் கண்ணன். சுழித்தோடும் யமுனையாற்றின் கரையில் சிறுபாறையில் நீரலையை நோக்கியபடி அவன் வரும் காலடியோசையே காதில் விழாதவளாக அமர்ந்திருந்தாள் ராதை. அவள் காலடியில் சத்தமின்றிச் சென்றமர்ந்தான் கண்ணன். மெதுவாக அவள் பாதத்தைத் தொடடான். அவளோ ஏதுமறியாதவள் போல் சடடெனக் காலை இழுத்துக் கொண்டாள். அவனோ விடாக்கண்டனாக அவள் கால் விரல்களை இறுக்கப் பற்றிக் கொண்டான்.
இப்போது அவளால் காலை அசைக்க முடியவில்லை. இருந்தும் அவனைத் திரும்பிப் பாராமலேயே அமர்ந்திருந்தாள். “என் ராணிக்கு என்ன கோபம்?" என்றான் கண்ணன். “நீ என்ன நினைத்துக் கொண்டாய்? நடப்பதற்காக காலுக்கும், உன் குழலைப் இசைப்பதற்காக கைக்கும் நன்றி சொல்வாயா நீ?“ என்று அலைகளை பார்த்தபடியே கோபமாகக் கேட்டாள். “என் கண்மணியல்லவா, ஏதோ வாய்தவறி சொல்லிவிட்டேன் இந்த ஒரு தடவை மன்னித்துவிடக் கூடாதா?” என அவள் பாதங்களை வருடியபடியே கொஞ்சலாகக் கேடடான்.
ஒரக் கண்ணால் அவனைப் பார்த்தாள் ராதை. தலை குனிந்து அமர்ந்திருந்த அவன் தலையிலிருந்த பீலி அவளைப் பார்த்துக் கண் சிமிட்டியது. அவன் அமர்ந்திருந்த நிலை அவள் உள்ளத்தைக் கனியச் செய்தபோதும் பேசாமலேயே அமர்ந்திருந்தாள். அவள் கால்விரலில் சொடக்கெடுத்துக் கொண்டிருந்தான் அவன். அதற்குமேலும் பொறுக்க முடியாமல், “சரி எழுந்திரு கண்ணா. இனியொருமுறை இப்படிச் செய்தாயானால் நான் பொல்லாதவளாகிவிடுவேன்" என்றாள்.
“ஆமாம் இப்போது மட்டும் மிக நல்லவள் நீ" என சிறு சிரிப்புடன் முணுமுணுத்தபடியே எழுந்தான் கண்ணன். எழுந்து போகத் திரும்பியவள் சற்றே நின்று, “என்ன சொன்னாய் கண்ணா?” எனத் திரும்பிப் பார்த்தாள். “இல்லை உத்தரவு ராணி என்று சொன்னேன்" என்றான் கண்ணன் தலை குனிந்தபடியே. “ஞாபகம் இருக்கட்டும் கண்ணா. நாளை நீ அரசனாகலாம், மனைவிகள் பலர் வரலாம். ஆனால் நானே உன் ராணி" என மிடுக்குடன் மொழிந்தவள் காற்றில் மிதப்பவள்போல் சென்றாள்.
தென்றல் தேரிலேறி தன் உள்ளத்தின் ராணி செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான் கண்ணன். தன் ஒட்டுமொத்த அன்பையே கிரீடமாக்கி அவளுக்கு சூட்டிவிடடான் அவன். அதனால்தான் இன்னும் அவள் ராதா ராணி என்றே வணங்கப் படுகிறாள்.
(இது வெறும் கற்பனை மட்டுமே...)