Wednesday, February 16, 2022

கண்ணனின் இதயம்

எப்போதும் போல கனவுக்கும் நினைவிற்கும் நடுவில் அலைபாய்ந்த ஒரு கற்பனை. வாழ்க்கை என்பதே பாதி நினைவுகளும் நிறைவேறாத கற்பனைகளின் ஏக்கங்களும்தானே... இதுவும் ஒரு ஆழ்மன உணர்வைத் தொடர்ந்து எழுந்த நினைவுதான். 

கண்ணனைப் பார்க்கச் செல்கிறேன். அதே கண்ணன்தான் ஆனால் தாடியுடன்.. அவனருகில் செல்கிறேன். “எங்கே வந்தாய்?” என்றான் நிமிர்ந்து பார்த்து. நான் எங்கெங்கோ இருந்தபோது மிக  அருகில் என்னுடன் இருந்த கண்ணன், அருகில் நெருங்கி எதிரே நின்றபோது எங்கோ நெடுந்தொலைவு சென்றுவிட்ட்தாக உணர்ந்தேன். வேற்று மனிதரைப் பார்ப்பது போன்ற வெற்றுப் பார்வையுடன் அவன் கேட்ட கேள்வி எங்கோ நெடுந்தொலைவு கடந்துவந்து உள்ளத்தை ஊடுருவ, தாங்க முடியாது கால்கள் தளர்ந்து அங்கேயே அமர்ந்து விட்டேன்.


நீண்ட நெடுங்காலம் போல் தோன்றிய சில நிமிடங்களோ அல்லது நொடிகளோ கடந்து தன்னுணர்வு வந்தபோது, உள்ளே “கண்ணா கண்ணா” என மனம் கதறிக் கொண்டிருந்தது. அப்போதுதான் அவன் கேட்ட கேள்வி புரிய, தடுமாற்றத்துடன் “உ.. உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்” என்றேன். “ம்” என்ற ஒற்றைச் சொல்லே பதிலாக வந்தது. நான் ஒருத்தி இருப்பதையே அறியாதவனாக தனது காரியத்தில் மூழ்கிவிட்டான். கண்ணனைக் காண என ஆவலுடன் வந்தவள் முழுவதுமாக உடைந்துவிட, மெதுவாக என்னைத் திரட்டி எழுந்து நின்றேன். 


முழுவதும் உள்ளே கரைந்துவிட்ட  குரலை மீட்டெடுத்து, வேண்டுமென்றே “நான் போகிறேன்” என்ற வார்த்தையுடன் நானும் சற்று மீண்டேன். இப்படியே போய்விடுகிறேன் என மனதுக்குள் சொல்லிக் கொண்டேன். திரும்பி சில அடிகள் நடந்தவள் ஏதோ அசைவை உணர்ந்து சற்றே திரும்பிப் பார்த்தேன். கண்ணனும் பின்னால் வந்து நின்றான். திரும்பி அவனிடம் ஓடிவிட அழுது அடம்பிடித்த மனதை அடக்கி மேலும் சில அடிகள் வைத்தேன். மீண்டும் பின்னால் அவன் வரும் அசைவை உணர்ந்து மனம் அசையாது நின்றுவிட, கால்களும் அசைய மறுத்து நின்றுவிட்டன. 


“எங்கே போகிறாய்?” என்றான். “தெரியாது” என்றேன் நான். “தெரியாமல் எங்கே போவாய்?” என்றான். “தெரியாமல் தானே வந்தேன். தெரியாமலேயே போய் விடுகிறேன்” என்றேன் அழுத்தத்துடன். “இந்தத் திமிர் இன்னும் போகவில்லையடி உனக்கு” என்று சிரித்தான். இன்னும் அவன் முகத்தை ஏறெடுத்துப் பார்க்கும் தைரியமின்றி எங்கோ பார்த்தபடி, “எல்லாமே கண்ணன் கொடுத்ததுதான். போகாது” என்றேன். மேலும், “வந்தபோது பேசாதிருந்து விட்டு இப்போது எதற்கு பின்னால் வருகிறாய் கண்ணா?” என்றேன். “நீயாக வந்தாய். என்னை அழைக்காமல் நீயே கிளம்பி விட்டாயே ராதா” என்றான்.


அவனது குரலின் வம்பிழுக்கும் தொனியிலும், ராதை என்ற அழைப்பிலும் என்னையறியாது திரும்பி, அவன் பார்வையை நேரடியாகவே சந்தித்து விட்டேன். குறும்புச் சிரிப்பும் கனிவும் நிறைந்த அதே கண்கள், அந்தப் பார்வையில் உருகி வழிந்து ஆறாகி, ஓடிச் சென்று அவன் கால்களைத் தழுவிக் கொண்டேன். கால்களை நனைத்த நதியை கையில் அள்ளி அவன் பருக, அவனுள் கலந்து நிறைந்தேன்…


"உயித் தீயினிலே வளர் ஜோதியே

எந்தன் சிந்தனையே எந்தன் சித்தமே..."


No comments:

Post a Comment

முழுமை

என்றும்போல் அந்தப் பௌர்ணமி முழுநிலவு  என்னுள் ஏக்கங்களை விதைக்க  தீராத உன் நினைவுகளுடன்  போராடிக்கொண்டு நான்... எதை மறப்பினும் உனை மறவேனென  ...