ஒருவரா இருவரா ஓராயிரம் பெண்கள் உனைச்சூழ...
அத்தனை அன்னையர் மடி நிறைந்து,
அத்தனை கன்னியர் விழி நிறைந்து
ஆயிரமாயிரமாய்ப் பொலிகிறாய் நீ..
ஈன்றெடுத்த அன்னை தேவகியோ
ஓருடலாய் உனை சுமந்தும்
ஏக்கத்துடன் காத்திருந்தாள் உனக்காய்..
பாலூட்டிச் சீராட்டி மடியிலுனைத் தாலாட்டி
முத்தங்களால் குளிப்பாட்டி மார்பிலிட்டு உறங்கவைத்தும்
ஏக்கம் தீராமல் தவித்தாள் யசோதையவள்
அன்னை முலையுண்டும் பசியடங்கா குழந்தை நீ
உன்மேல் எத்தனை அன்பிருந்தால் உனக்காய்த்தன்
உயிரையே ஊட்டிச் செல்வாள் பூதகி
உன்னிடம் மயங்கி உன் வேய்ங்குழலில் பித்தாகி
உலையிலிட்ட மெழுகானாள் ராதையெனும் பேதை
பதினாயிரம் கோபியராய் பதினாயிரம் கண்ணனென்றான உன்னுடன்
ஆடிக்களித்தும் அடங்காக் காதல் கொண்ட பெண்மை
உன் தேவியரெண்மராகி திசையெட்டும் சூழ்ந்திருந்தது
உன்னிலிருந்து வேறல்ல எனத் தனையுணர்ந்து
இதயக்கமலவாசா என அழைத்த பாஞ்சாலியாய்
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியும்
உனைப் பாடிக் களித்த மீராவுமாய்
ஆயிரமாயிரம் பெண்மையாகி உன்னுடன்
ஆடல் கண்டும் ஊடல் கொண்டும்
ஆயிரமாயிரம் ஜென்மங்கள் இவ்வோர் பிறவியில் வாழ்ந்தபின்னும்
ஆயிரம் மடங்காய் உன்மேல் காதல் பெருகி
உனையெண்ணி உருகி நிற்கிறேன் இன்னும்.…